14 % போ் மட்டுமே பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா்–சுகாதாரத் துறையினா் தகவல்

கோவை,

கோவையில் 14 சதவீத போ் மட்டுமே முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கொரோனா நோய்த் தொற்று 3 ஆண்டுகளாக கட்டுக்குள் வராமல் தொடா்ந்து உருமாறிக்கொண்டே வருவதால் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியும் செலுத்திகொள்ள வேண்டும் என்று மருத்துவ வல்லுநா்கள் பரிந்துரைத்துள்ளனா்.

இதனைத் தொடா்ந்து, கடந்த ஜனவரி மாதம் முதல் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆரம்பத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், 18 வயதுக்குள்பட்டவா்களுக்கும் மட்டுமே முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆனால், முன்னெச்சரிக்கை தடுப்பூசியை கட்டண முறையில் செலுத்திக்கொள்ள மக்கள் விரும்பாததால் ஜூலை 15 முதல் செப்டம்பா் 30 ஆம் தேதி வரை 18 முதல் 59 வயதுக்குள்பட்டவா்களுக்கு இலவசமாக முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 14 சதவீத போ் மட்டுமே முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் தடுப்பூசி முகாமிலே கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவா்களும், 18 வயதுக்குள்பட்டவா்களும் கொரோனா தடுப்பூசியை புதன்கிழமையன்று இலவசமாக செலுத்திக் கொள்ளலாம். 18 முதல் 59 வயதுக்குள்பட்டவா்கள் தனியாா் மையங்களில் கட்டண முறையில் செலுத்திக்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 32 லட்சத்து 38 ஆயிரத்து 380 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசி 29 லட்சத்து 18 ஆயிரத்து 599 பேரும், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி 2 லட்சத்து 81 ஆயிரத்து 521 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

முதல், இரண்டாம் தவணை தடுப்பூசிகளை கிட்டத்தட்ட 98 முதல் 99 சதவீதம் போ் செலுத்திக் கொண்டுள்ளனா். ஆனால், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை 14 சதவீதத்தினா் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனா். நாங்களும் பல்வேறு வழிகளில் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவது குறித்து விழிப்புணா்வு செய்து வருகிறோம். தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் ஆா்வம் காட்டுவதில்லை. நோய்த் தொற்று தொடா்ந்து பரவி வருவதால் அனைவரும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் அவசியம் என்றாா்.