கோவை நகரில் விதவிதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன அந்த வகையில் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் போலி ரூபாய் நோட்டுகளை காட்டி சிலர் பண மோசடி செய்து வருவதாக சிறப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி நமச்சிவாயம் சிறப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் கமலி ஆனந்தி மற்றும் தனிப்படை போலீசார் கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பிரஸ் காலனி பாலாஜி கார்டன் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர். அங்கு தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர் .அப்போது ஒன்பது பெட்டிகளில் போலி 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து போலி ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த விருதுநகரை சேர்ந்த சக்திவேல் பாண்டி என்பவரின் மகன் காளிமுத்து (28), நாமக்கல்லை சேர்ந்த பழனியப்பன் என்பவரின் மகன் மோகன் மோகன்ராஜ் (38), திருச்செங்கோட்டை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரின் மகன் விஜயகுமார் ஆகிய மூவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர் .தொடர்ந்து அங்கிருந்த ரூபாய் நோட்டுகள் அடங்கிய பெட்டிகள் ,லேப்டாப் செல்போன் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் தப்பி ஓடிய பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரத்தினவேல் என்பவரின் மகன் கோபாலை போலீசார் தேடி வருகின்றனர். பிடிபட்ட நபர்கள் போலி ரூபாய் நோட்டுகளை காண்பித்து பண இரட்டிப்பு மோசடி செய்ய திட்டமிட்டு இருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.