கோவை மாநகர பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் முன்பு நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதே சமயத்தில் ஒப்பணக்கார வீதி பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றின் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதை அடுத்து போலீசார் ஐந்து தனிப்படை அமைத்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளின் கடைகள் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவல் இன்று காலை அவர்களது அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது தெரிய வந்தது. கோவை 100 அடி சாலையில் உள்ள ரத்னபுரி பாரதிய ஜனதா கட்சி மண்டல தலைவர் மோகன் என்பவருக்கு சொந்தமான கடை முன்பு நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவல் இன்று காலை தெரியவந்தது. இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர் .இந்நிலையில் இன்று மதியம் குனியமுத்தூர் பகுதியில் உள்ள இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தியாகு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார் மீதும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு விசு சென்றதாக கிடைத்த தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் .இந்த தகவலை கேள்விப்பட்ட பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை நகரில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி பிரமுகர்களின் வீடுகள் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.