
கோவை,
கோவை காந்திபுரத்தில் உள்ள டவுன் பஸ் ஸ்டாண்டில் தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன .இதில் நஞ்சே கவுண்டன் புதூர் செல்லும் பஸ்ஸில் கோவை செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் ராஜசேகரன் (41) என்பவர் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இதேபோல கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் கோபாலன் (59 )என்பவர் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை செக்கிங் இன்ஸ்பெக்டர் கோபாலன் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த கண்டக்டர் ராஜசேகரனிடம் பயணிகளுக்கு சரியான நேரத்தில் டிக்கெட்டுகள் கொடுப்பதில்லை என புகார் வந்ததாக கூறி அது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். இதை அடுத்து இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர் .அப்போது சண்டையை விலக்கி விடுவதற்காக அங்கே நின்று கொண்டிருந்த செக்கிங் இன்ஸ்பெக்டர் செல்வராஜன் முயற்சி செய்தார். அப்போது ராஜசேகரன் அவரையும் சரமாரியாக தாக்கினார். இதில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதை அங்கு இருந்த பயணிகள் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் .அப்போது கண்டக்டர் ராஜசேகரனும் செக்கிங் இன்ஸ்பெக்டர் கோபாலனும் கட்டிப் புரண்டு சண்டை போட்டு கொண்டனர். இதில் ராஜசேகருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சுவலி உண்டானது. உடனே அருகில் இருந்த மற்ற பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் ராஜசேகரனை உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதேபோல ராஜசேகரன் தாக்கியதில் காயமடைந்த செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் கோபாலன் மற்றும் செல்வராஜன் ஆகியோரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் .இது குறித்த காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில் அரசு போக்குவரத்து கழக கண்டக்டர் மற்றும் செக்கிங் இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஒருவருக்கொருவர் பயணிகள் முன்னிலையில் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.