ஊருக்குள் புகுந்த காட்டு மாடு
கோவையில் பரபரப்பு
கோவை சரவணம்பட்டியை அடுத்துள்ள கீரணத்தம் பகுதி சகாரா சிட்டி எனப்படும் இடத்தில் நேற்று காலை ஒரு காட்டு மாடு நடமாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து கோவை வனச்சரக அலுவலர் அருண்குமார் தலைமையிலான 30 பேர் கொண்ட குழுவினர் அங்கு வந்து காட்டு மாடு குறித்து விசாரித்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் சரவணம்பட்டியை அடுத்துள்ள வினாயகபுரம் பகுதியில் அந்த காட்டுமாடு இருப்பதான தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்து சென்று அதனை பின்தொடர்ந்து சென்று கண்காணித்தனர்.
இரவு நேரமாவதால் காட்டு மாட்டினை பின் தொடர்வதிலும், தொடர்ந்து கண்காணிப்பதும் கடும் சிரமங்கள் நிலவிய போதும் இன்று அதிகாலை சுமார் 4.30 வரை சரவணம்பட்டி, விலாங்குறிச்சி, காளப்பட்டி வரையிலும் கண் பார்வையில் வைத்து பின் தொடர்ந்த நிலையில், காளப்பட்டி அருகில் சரவணம்பட்டி யிலிருந்து வரும் ஓடை அருகே அடர்ந்த புதர் பகுதியினுள் காட்டு மாடு சென்ற காரணத்தினால் அதனை பின்தொடர இயலாமல் சுற்றி வந்து தேடிய நிலையில் காட்டு மாடானது கண்காணிப்பு வளையத்திலிருந்து விலகி சென்றது.
தொடர்ந்து இன்று காலை முதல் வனச்சரக பணியாளர்கள் பதினைந்து பேர் கொண்ட குழுவினர் சரவணம்பட்டி, காளப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காட்டு மாடினை கண்டவுடன் உடல் நிலை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் சுகுமார் அவர்களும் சம்பவ பகுதியில் தயார் நிலையில் உள்ளார்.
மேலும், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் வனப் பாதுகாவலர் இராம சுப்பிரமணியன், அறிவுரைப்படியும், கோவை வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் வழிகாட்டுதலில் கோவைக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர்கள் செந்தில்குமார், தினேஷ்குமார் ஆகியோர் கண்காணிப்பில் காட்டு மாடினை தேடும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுஉள்ளது.