கடன் தருவதாக கூறி வீட்டை விற்ற புரோக்கர் மீது வழக்கு

சென்னை முடிச்சூர் ரோடு வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தம்பி என்பவரின் மனைவி ஹன்னா நேசமணி (59). இவருக்கு சொந்தமான வீடு கோவை புதூர் இபி காலனி பகுதியில் உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு தனது கணவரின் மருத்துவ சிகிச்சை மற்றும் குழந்தைகளின் படிப்புச் செல்வதற்காக பணம் தேவைப்பட்டது. இதற்காக ஹன்னா நேசமணி கடன் வாங்குவதற்கு பல இடங்களில் முயற்சி செய்தார். அப்போது கோவையைச் சேர்ந்த புரோக்கர் சுந்தரசாமி என்பவர் தனக்கு தெரிந்த பைனான்சியரிடம் பணம் வாங்கி தருவதாக கூறியிருக்கிறார். அதற்கு அடமானமாக வீட்டை வைத்து வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார். இதை நம்பிய ஹன்னா நேசமணியிடம் 5 லட்சம் ரூபாய் பணம் வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கி தருவதாக சுந்தர் சாமி கூறினார் .தொடர்ந்து ஹன்னா நேசமணியை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தேவையான ஆவணங்களை கையொப்பம் பெற்றுக் கொண்டார். பின்னர் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கமிஷன் தொகை என எடுத்துக்கொண்டு மீதமுள்ள 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை கடன் தொகையாக ஹன்னா நேசமணி இடம் கொடுத்துள்ளனர். அவரும் மாதம் தோறும் வட்டியை செலுத்தி வந்துள்ளார் .அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து தனது வீட்டை வீட்டை மீட்டுக் கொள்வதாக கூறி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருக்கிறார். ஆனால் சுந்தரசாமி சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளார். அதன் பிறகு பத்திரங்கள் வேறு ஒருவரிடம் இருப்பதாகவும் அதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவாகும் எனக் கூறி அந்தப் பணத்தையும் சுந்தரசாமி வாங்கியுள்ளார். அதன் பிறகு ஹன்னா நேசமணி சுந்தரசாமியை தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இதை அடுத்து அவர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆவணங்களை சரிபார்த்த பொழுது தனது வீடு செந்தில்நாதன் என்பவரது பெயருக்கு கிரயம் செய்யப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து அவர் தொடர்ந்து பல முறை கோவை மாநகர போலீஸ் மற்றும் குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். ஆனால் சரியான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுந்தரசாமி மற்றொரு மோசடி வழக்கில் கடந்த மாதத்தில் கைது செய்யப்பட்ட தகவல் ஹன்னா நேசமணிக்கு தெரிய வந்தது.இதன் பின்னர் அவர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மீண்டும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடன் தருவதாக கூறி வீட்டை கிரைய ஒப்பந்தம் செய்து அதை செந்தில் நாதன் என்பவருக்கு சுந்தரசாமி விற்று மோசடி செய்தது தெரிய வந்தது. இதை அடுத்து எஸ்.எஸ்.குளம் அடுத்த கள்ளி பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரின மகன் சுந்தரசாமியை(59) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.