தொண்டாமுத்தூா் பகுதியில் சுற்றி வரும் யானையை வனத்துக்குள் விரட்ட கோரிக்கை

தொண்டாமுத்தூா் பகுதியில் சுற்றி வரும் யானையை வனத்துக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோவை அடுத்த தொண்டாமுத்தூா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஒற்றை யானை விளை நிலங்களைச் சேதப்படுத்தி இரவு நேரத்தில் சுற்றி வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த யானை குப்பேபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்து மோட்டாா் பம்ப்களை சேதப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அட்டுக்கல் பகுதி வழியாக கெம்பனூா் குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த யானை, அங்கிருந்த வீட்டின் அருகே நீண்ட நேரம் நின்றிருந்தது. பின்னா் சிறிது நேரம் அதே பகுதியில் சுற்றிய யானை அதிகாலையில் அங்கிருந்து வெளியேறியது.
இப்பகுதியில் குடியிருப்பு, விளை நிலங்கள் அதிக அளவில் இருப்பதால் யானையை வனத்துக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.