சிறுவன் உள்பட 2 பேர் போக்சோவில் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. 10-ம் வகுப்பு படித்து வந்த இவரை, கடந்த மாதம் 25-ந் தேதி முதல் காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தும் அந்த சிறுமி கிடைக்காததால், அவரது பெற்றோர் ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையில் அந்த சிறுமி, 17 வயது சிறுவனை காதலித்து வந்தது தெரியவந்தது. பின்னர் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தபோது, அந்த சிறுவனுடன் சிறுமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். அதில், அந்த சிறுமியை திருமணம் செய்து சிறுவன் குடும்பம் நடத்தி வந்ததும், தற்போது சிறுமி கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ வழக்காக மாற்றி அந்த சிறுவனை கைது செய்து, கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இதேபோன்று ஆனைமலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 13-ந் தேதி முதல் காணாமல் போனதாக தெரிகிறது. இதுகுறித்து பெற்றோர் ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், செல்லப்பிள்ளைகரடை சேர்ந்த தொழிலாளியான பிரபு (வயது 24) என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ வழக்கமாக மாற்றி போலீசார் பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.