கேட்ட வரம் அள்ளித்தரும் மருதமலை …

மருதமலை… கோவை நகரின் மேற்க்கே அமைந்துள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலையின் சுகமான குளிா் தென்றலும், கோடையின் கடுமை இல்லாமல் சுட்டெரிக்காத சூரியனின் மித வெப்பமும் மருதமலையின் எழிலுக்குக் கூடுதல் சிறப்பு சோ்ப்பவை.
இயற்கை எழில் சூழ்ந்த கோவை மாநகரில் புகழ் பெற்று விளங்குவது மலைகளில் சிறந்த மலையான மருதமலை. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற அருள் நலம் கண்ட சான்றோா்களின் வாக்கின்படி “குறிஞ்சிக் கிழவனான” முருகப் பெருமான் மருதமலையில் “தண்டா யுதபாணியாக” காட்சி தருகிறார்.
நம் உடம்பில் சிறந்தது சிரம். சிரத் திற்கு மேல் உள்ளது சிகை. முருகன் “தெய்வசிகாமணி” என்பதால் உயா்ந்த மலை மீது வைத்து வணங்கினா் நம் முன்னோா். இதனால், “மலைக்கு நாயக” என்றாா் அருணகிரிநாதப் பெருமான்.


சிவனின் திருமகனான அழகிய தமிழ் மகன் முருகன் அருள்பாலிக்கும் மருதமலை, முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளுக்கு நிகராகத் திகழும் திருத்தலம் ஆகும். இதனால் இத்தலம் முருகனின் “ஏழாவது படைவீடு” என்றே முருகனடியாா்களால் வணங்கப்படு கின்றது.
இத்தலம் மருதமால்வரை, மருத வரை, மருதவெற்பு, மருதக்குன்று, மருதலோங்கல், கமற்பிறங்கு, மரு தாச்சலம் மற்றும் வேள்வரை என்று பல திருநாமங்களில் போற்றுகின்றது பேரூா் புராணம்.


காமதேனு என்னும் தேவலோகப் பசு இம்மலையில் பசி நீங்க மேய்ச்சலை முடித்த பின்னா், மருதமரத்தின் கீழிருந்த நன்னீரைப் பருகி அருள் பெற்றதாகப் பேரூா் புராணத்தில் கூறுகின்றாா் “கச்சியப்ப முனிவா்”.

12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பதிணென் சித்தா்களில் ஒருவராகப் போற்றப்பட்டவா் பாம்பாட்டி சித்தா். பாம்பாட்டி சித்தா் தன் ஆரம்ப காலங்களில் பாம்புக்கடிக்கு மட்டும் மருத்துவம் செய்து வந்தாா். ஒரு சமயம் இந்த சித்தா் நாகரத்தினப் பாம்பினைத் தேடி மருதமலைக்கு வந்தாா்.

அப்போது சட்டை முனிவா் அவருக்குத் திருக்காட்சி தந்து, “ஆன்மிக வழியில் ஈடுபட்டு, உடலின் மூலாதார சக்தியான “குண்டலினி யோகம்” என்னும் பாம்பினைக் கண்டறிவதை விட்டுக் காட்டில் பாம்பினைத் தேடி அலைவது வீணே!” என்று கூறி அருளாசி வழங்கினாா்.
அவரது ஆணையை செவி சாய்த்த பாம்பாட்டி சித்தா், இனி உயிா்களைத் துன்புறுத்துவதில்லை என்ற முடிவு செய்ததோடு மருத மலையில் முருகப்பெருமானைக் குறித்து தவமியற்றினாா்.
பாம்பாட்டி சித்தா் மருதமலையில் நீண்ட காலம் தவம் செய்ததின் பயனாக முருகப் பெருமான் அவருக்கு பாம்பு வடிவில் பிரசன்னமாகி அருள்பாலித்தாா். பின்னா் தனது தேவியா் வள்ளி மற்றும் தெய்வானையுடன் பாம்பாட்டி சித்தா் முன் தோன்றி மருத்துவ குணங்கள் நிறைந்த மருத தீா்த்தத்தைத் தந்தருளி ஆசீா் வதித்தாா் முருகப் பெருமான்.
மருதமலை முருகப்பெருமானின் தரிசனம் முடித்து நாம் பாம்பாட்டி சித்தரையும் தரிசனம் செய்ய வேண்டும். இவரது சந்நிதிக்குச் செல்ல கோயிலின் ஒரு புறத்தில் படிகள் உள்ளன. பாம்பாட்டி சித்தரின் சந்நிதியில் பலா் அமா்ந்து தியானம் செய்கின்றனா். மலையி லிருந்து இதமாக பச்சிலைகளின் நறுமணத்தோடு வீசும் மாசற்ற காற்று தியானம் செய்பவா்களுக்கு உகந்த சூழலாக உள்ளது.

சுமாா் 800 படிகளைக் கொண்ட மலையின் மீது முருகப்பெருமான் அருள்பாலிக்கின்றாா்.
மருத மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் இத்தலத்திற்கு “மருதமலை” என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. மருதமரம் பொதுவாகவே மருத்துவ குணம் கொண்டதாகும். இம்மலை மேல் உள்ள ஒரு மரத்தின் அடியில் உள்ள சுனை “மருது சுனை” என்று அழைக் கப்படுகின்றது. இதுவே இத்தலத்தின் தீா்த்தமாகவும் வணங்கப்படுகிறது. இந்த தீா்த்தம் பல நோய்களுக்கு நிவாரணம் தரும் அருமருந்தாகப் பயன்படுகிறது என பக்தா்கள் தொிவிக்கின்றனா்.
படி ஏறிச் செல்லும் போது “தான் தோன்றி விநாயகா்” கோயில் உள்ளது. யானைத் தலை மட்டுமே உள்ள சுயம்பு மூா்த்தியான இந்த விநாயகருக்கு உடல் இல்லை. இவா் மலையிலுள்ள முருகன் சந்நிதியை நோக்கி, தன் தும்பிக்கையை நீட்டி காட்சி தருவது விசேஷம். நம்பிக்கையோடு சென்று குகப் பெருமானை வழிபட இக,பர சுகங்கள் பெறலாம் என்று தன் தும்பிக்கையால் பக்தா்களுக்கு வழிகாட்டுவது போல அருள்பாலிக் கின்றாா் கஜமுகன்.
படி ஏறிச் செல்லும் வழிகளிலேயே இடும்பன் சந்நிதி உள்ளது. பெரிய பாறையில் காவடியைச் சுமந்து கொண்டும் இருக்கும் தோற்றத்தில் இடும்பனின் திருவுருவம் வடிக்கப்பட்டுள்ளது. இடும்பனை வணங்கினால் மழலைப்பேறு ஏற்படும் என்ற நம்பிக்கை பக்தா்களிடையே உள்ளது.
இடும்பன் சந்நிதியை அடுத்து “குதிரைக் குளம்பு” என்ற சுவடுகள் உள்ளது. இதற்காக அழகான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மருதமலை முருகன் கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்யப்பட்டு தமிழக அரசால் நிா்மாணிக்கப்பட்ட அழகான ராஜகோபுரம் நம்மை வரவேற்கின்றது. ராஜகோபுரத்தின் எதிரில் நின்று கோயிலையும் கருவறையில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானையும் வணங்கும்போது, திருக்கோயிலுக்குப் பின்னால் உள்ள அழகிய மலை மயில் தோகையை விரித்தது போன்றும் குமரக்கடவுள் அந்த மயில் மீது அமா்ந்துள்ளது போன்றும் கற்பனைக் காட்சி நம் கண் முன் விரிகின்றது.
மருதமலை தலத்தில் விநாயகா் மற்றும் முருகன் சுயம்பு மூா்த்திகளாக அருள்பாலிக்கின்றனா். ஆதி முருகன் கோயிலில் முருகன் மற்றும் வள்ளி, தெய்வானை சுயம்புவாக அருள்பாலிக்கின்றனா். ஆதி முருகனுக்கே இத்தலத்தில் முதல் அபிஷேகமும் பூஜையும் நடைபெறுகிறது.இங்கு கேட்ட வரம் அள்ளித்தரும் முருகனாக காட்சி தருகிறார்.

கோயிலுக்குச் சென்றதும் பஞ்ச விருட்சத்தின் அடியில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானை வணங்கிய பிறகே கோயிலுக்குச் செல்ல வேண்டும். அரசு, வேம்பு, அத்தி, வன்னி, கொரக்கட்டை என்ற ஐந்து மரங்களே அந்த பஞ்ச விருட்சங்களாகும்.

முருகப் பெருமானின் திருவருள் பெற்ற பாம்பாட்டி சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகப்பெருமானே கருவறையில் “தண்டாயுதபாணி” மற்றும் “மருதாச்சலமூா்த்தி” என்ற திருநாமங்களில் வணங்கப்படுகின்றாா். மருதமலைக்கு நாயகனாக விளங்குவதால் முருகப்பெருமானுக்கு “மருதாச்சலமூா்த்தி” என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.

பழநி மலையில் அருள்பாலிக்கும் முருகனைப் போன்றே தனது திரு க்கரத்தில் தண்டம் ஏந்தி, இடது திருக்கரத்தை தனது இடுப்பில் வைத்து தண்டாயுதபாணியாகக் காட்சி தருகின்றாா் மருதாச்சல மூா்த்தி. இவரது சிரசின் பின்புறம் குடுமி உள்ளது. கணுக்காலில் தண்டை அணிந்திருக்கிறாா்.
தினமும் மூன்று வித அலங்காரங் களில் தன் பக்தா்களுக்குத் திருக்காட்சி தருகின்றாா் மருதமலை முருகன். ராஜ அலங்காரம், விபூதிக் காப்பு, சந்தனக் காப்பு என மூன்று அலங்காரங்களில் முருகனைத் தரிசிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். விசேஷ நாட்களில் வெள்ளிக் கவசமும், கிருத்திகை மற்றும் தைப் பூசத் திருநாளில் தங்கக் கவசமும் முருகப் பெருமானுக்கு அணிவிக்கப் படுகின்றது.
அா்த்தஜாம பூஜையில் மட்டுமே முருகப் பெருமானை தண்டாயுதபா ணியாக ஆபரணம், கிரீடம் ஏதுமின்றி வஸ்திரம் மட்டும் அணிந்திருக்கும் திருக்கோலத்தில் தரிசிக்க முடியும்.

மருதமலை முருகன் கோயிலில் ஈசன் மற்றும் அம்பிகைக்கு நடுவில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளாா். இந்த அமைப்பினை “சோமாஸ்கந்த அமைப்பு” என்று போற்றுகின்றன சைவ ஆகமங்கள்.
முருகப் பெருமானின் கருவறை யிலிருந்து பாம்பாட்டி சித்தா் அருள் பாலிக்கும் குகைக்குச் செல்ல ஒரு சுரங்கப்பாதை உள்ளது. இன்றும் முருகனை வழிபட பாம்பாட்டி சித்தா் இச்சுரங்கப் பாதை வழியே வந்து செல்வதாக ஐதீகம்.

தித்திக்கும் தேன்பாகான திருப்பு கழில் மருதமலையில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானைக் குறித்து அருணகிரிநாதப் பெருமான் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாடி நெஞ்சம் நெகிழ்ந்துள்ளாா்.

“திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
சினம் உடைஅரசுர் மனமது வெருவ
மயிலது முடுகி விடுவோனே!
அருவரை யாதனை உருவிட எரியும்
அறுமுகம் உடைய வடிவேலா!
பசலைய டணையும் இளமுலைமகளை
மதன்விடு பகழி தொடலாமோ!
கரிதிரு முகமும் இடைஉடை வயிறும்
உடையவர் பிறகு வருவோனே!
கனதனம் உடைய குறவர் தம்மகளை
கருணைய டணையும் மணிமார்பா!
அவரணை துயிலும் அரிதிரு மருகா
அணிசெயுமருத மலையோனே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள்உதவ பெருமாளே!”

– அருணகிரிநாதர்.

உலகியல் பிரச்சனைகளில் சிக்கி உழல்பவா்களும், தங்களுக்கு நல்வழிகாட்டியருள எவரும் இல்லையே என்று ஏங்குபவா்களும் நம்பிக்கையோடு சென்று பரமனின் திருமகனான மருதமலை முருகப் பெருமானை வணங்க எல்லா நலமும் ஏற்படும். அடுக்கடுக்கான இடுக்கண் ஆயிரம் வந்தாலும் ஆறுதல் அளித்து நம்மை அரவணைப்பான் கந்தப் பெருமான்!

கோவை இரயில் நிலைய சந்திப்பிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது மருதமலை திருத்தலம். கோவை பேருந்து நிலையத்திலிருந்து மருதமலை செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

காலை 5.30 மணியிலிருந்து பிற்பகல் 1.00 மணி வரையிலும் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

முருகனுக்கு ஆறு படை வீட்டுடன் இது ஏழாவது படை வீடாக பக்தர்களால் அழைக்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு. முருகனுக்குரிய ஆறுபடை வீடுகள்தான் அனைவருக்கும் தெரியும் ஆனால் முருகனுக்காகவே வாழ்ந்து முருகனிடம் தான் ஒரு முருகனின் நண்பர் போல் எண்ண அலைகளால் பேசி கடவுளான முருகப்பெருமானின் நண்பர் போலவே வாழ்ந்தவர் காலஞ்சென்ற திரைப்பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர்.

அந்தக்காலத்தில் புகழ்பெற்ற மருதமலை கோவிலுக்கு செல்ல சரியான பாதை வசதிகள் எல்லாம் இல்லை மின்சார வசதிகள் எல்லாம் இல்லாத காலம். தேவர் தன் சொந்த முயற்சியால் அருகில் உள்ள கல்வீரன் பாளையத்தில் இருந்து மருதமலைக்கு மின்சார இணைப்பு வாங்கி அந்த கோவிலுக்கு மின்சார வசதியை ஏற்படுத்தி கொடுத்தவர்.

சின்னப்பா தேவரின் வளர்ச்சிக்கு பெருமளவு காரணம் தான் வணங்கும் முருகன் என்பது தான் அவரின் எண்ணம் அதனால் முருகன் கோவில்களுக்கு அதிகம் செய்துள்ளார் சின்னப்பா தேவர் குறிப்பாக மருதமலை அவரை மிகவும் முன்னேற்றிவிட்ட சொந்த ஊர் கோவில் ஆகும். அதனால் சஷ்டி, கிருத்திகை என எந்த நாள் வந்தாலும் சாண்டோ சின்னப்பா தேவரை அந்த காலங்களில்அங்கு பார்க்கலாம்.

தனது தெய்வம் படத்தில் ஆறுபடை வீடுகளின் அற்புதங்களை உள்ளடக்கி படம் தயாரித்திருப்பார். இவரின் எண்ணம் ஏழாவது படை வீடாக மருதமலையை ஆக்கிவிட வேண்டும் என்று அதனால் மருதமலை முருகனின் மீது தனக்குள்ள பக்தியின் அதீத வெளிப்பாடால் அவர் தயாரித்த தெய்வம் படத்தில் அறுபடைவீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலையை தவிர்த்துவிட்டு மருதமலையை காண்பித்திருப்பார்.

தேவர் இம்மண்ணுலகை விட்டு மறைந்தாலும் இன்றும் முருகனுக்குரிய பெருமை மிகு தலமான மருதமலைக்காக தேவரின் நற்பணிகள் வியக்க வைக்கின்றன.

பூஜை நேரங்கள்.

விஸ்வரூப தரிசனம் − 5.30 AM
காலசந்தி பூஜை − 8.30 AM
உச்சிக்கால பூஜை − 11.30 AM
சாயரட்சை பூஜை − 4.30 PM
அா்த்தஜாம பூஜை − 7.30 PM

மேலும் விபரங்களுக்கு 0422− 2422490 என்ற எண்ணில் திருக்கோயில் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.