
கோவையில் ரூ.50 கோடி வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் செயல்படுவதாகவும், உச்ச நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் பதில் மனு தாக்கல் செய்யாமல் வழக்கை இழுத்தடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில், சுமார் ரூ.40 முதல் 50 கோடி மதிப்பிலான நிதி மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தது தொடர்பாக கடந்த 2024-ம் ஆண்டு குறிப்பிட்ட ஒரு வங்கியும் சில நபர்களும் இணைந்து தங்களை ஏமாற்றி விட்டதாக பாதிக்கப்பட்ட கேசவபாண்டியன் என்பவர் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை கோவை மாநகர
குற்றப்பிரிவு ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர் அஜித் ஆகியோர் தற்போது விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் பெற்றிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 28-ந் தேதி ரத்து செய்தது. தொடர்ந்து, செப்டம்பர் 11-ந் தேதி பிறப்பித்த மற்றொரு உத்தரவில், “இந்த வழக்கின் விசாரணையை 4 வார காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் விசாரணை அதிகாரிகள் குற்றவாளிகளைக் கைது செய்யவோ, வழக்கிற்குத் தொடர்புடைய போலி ஆவணங்களைக் கைப்பற்றவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, தடய அறிவியல் துறை ஆய்விற்காக கையெழுத்து மாதிரிகளைப் பெறுவதற்கு கோவை 7-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 29-ந் தேதி உத்தரவிட்டது. அதன்படி, கேசவபாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து மாதிரிகளை வழங்கினர். அப்போது அங்கிருந்த மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம், வழக்கின் அசல் ஆவணங்களை மறுநாளே (செப்டம்பர் 30) கைப்பற்ற வேண்டும் என மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இருப்பினும் போலீசார் அந்த ஆவணங்களைக் கைப்பற்றாமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையே, குற்றவாளிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தை அணுகி செப்டம்பர் 30-ந் தேதி இடைக்காலத் தடை ஆணை பெறப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த அக்டோபர் 29-ந் தேதி விசாரணைப் பட்டியலுக்கு வரவிருந்தது. ஆனால், தமிழகக் காவல்துறை கோவை மத்திய குற்றப்பிரிவு சார்பில் உரிய பதில் மனு தாக்கல் செய்யப்படாததால், வழக்கு விசாரணைக்கு வர முடியாமல் போனது.
அக்டோபர் முதல் வாரத்திலேயே பதில் மனுவிற்கான விளக்கங்களை அதிகாரிகள் பெற்றுக்கொண்ட போதிலும், கடைசி வரை பதில் மனு தாக்கல் செய்யாமல் மெத்தனமாக இருந்துள்ளனர்.
இதுபோல பல வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக மாநகர குற்றப்பிரிவு விசாரணை அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது . சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்கவிடாமல் இழுத்தடிக்கின்றனர். காவல்துறை உயர் அதிகாரிகள் இதில் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றத்தில் விரைந்து பதில் மனு தாக்கல் செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.