
நாமக்கல்,நாமக்கல்லை சேர்ந்தவர் ரவிக்குமார் என்பவரின் மகள் ஸ்ரீநிதி (23) . இவர் கடந்த மாதம் மேற்கு மண்டல காவல்துறை ஐஜியிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார் .அதில் நாமக்கல்லைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் குர்ஷாந்த் என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 27-ந் தேதி திருமணம் நடைபெற்றது என்றும் திருமணத்தின் போது ஶ்ரீநிதியின் பெற்றோர் தங்க நகை மற்றும் பல லட்ச ரூபாய் ரொக்கம் வழங்கியுள்ளனர் என்றும் கூறியிருந்தார். மேலும் திருமணம் ஆகி சில நாட்களிலேயே மேலும் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் கொடுமைப்படுத்துவதாகவும் அதனைத் தொடர்ந்து கணவர் வீட்டில் இருந்து வெளியேறியதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் நாமக்கல் அனைத்து மகளிர் போலீசார் ஸ்ரீ நிதியின் கணவர் குர்ஷாந்த், அவரது தந்தை பொன்னுச்சாமி மற்றும் சகோதரர் நிஷாந்த் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். புகாரின் பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மணமகன் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தவில்லை என்பது தெரிய வந்தது .தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் இது குறித்த விரிவான அறிக்கையை நாமக்கல் அனைத்து மகளிர் போலீசாரிடம் வழங்கினர் . போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீநிதி அளித்த புகாரில் முகாந்திரம் இல்லை என்பது தெரிய வந்தது. இதற்கிடையே குர்ஷாந்த், பொன்னுச்சாமி ,நிஷாந்த் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி வரதட்சணை கேட்டு குர்ஷாந்த் உள்ளிட்டோர் கொடுமைப்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதால் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.