
கோவை,
கோவை மாவட்ட வர்த்தக சங்க தலைவர் முத்துப்பாண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளது. இதில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை ரொக்கமாக எடுத்துச் செல்லக்கூடாது என்றும் உரிய ஆவணங்களோடு தான் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறையாக இது இருந்தாலும் பல வருடங்களாகவே பல தேர்தல்களில் 50 ஆயிரம் ரூபாய் என்பதுதான் வரைமுறையாக உள்ளது. இந்தத் தொகையை உயர்த்த வேண்டும் என கடந்த பல தேர்தல் சமயங்களில் வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர் .ஆனால் இன்னும் 50 ஆயிரம் ரூபாய் என்ற நடைமுறையே தொடர்கிறது. இன்றைய சூழலில் சிறிய அளவிலான கடை நடத்துபவர்கள் மார்க்கெட்டிற்கு சென்று பொருட்களை வாங்குவதற்கும் சப்ளை செய்த பொருட்களுக்கு உரிய தொகையை வசூலிப்பதற்கும் என செல்ல வேண்டிய உள்ளது .அப்போது 50 ஆயிரம் ரூபாய் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு சாதாரணமான தொகையாகும். பணத்தைக் கொண்டு செல்லும் நபர்கள் அரசியல்வாதிகளா வியாபாரிகளா என்பதை பறக்கும் படையினர் கண்டறிந்து பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் .அதை விடுத்து வியாபாரிகள், வர்த்தகர்களை நசுக்கும் விதமாக அவர்களது வியாபாரத்தை முடக்கும் விதமாக அவர்கள் சம்பாதித்த பணத்தை பறிமுதல் செய்வதும் பின்னர் அதற்குரிய ஆவணங்களை கொண்டு வரச் சொல்லி அலைக்கழிப்பதையும் தவிர்க்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை வகுக்கும்போது அரசியல் கட்சிகளை மட்டும் அழைத்து விவாதிக்காமல் வர்த்தக அமைப்பு பிரதிநிதிகளையும் அழைத்து அவர்களுடைய கோரிக்கைகளையும் சேர்த்து அதற்குரியது போல் இனி வருங்காலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை வகுக்க வேண்டும். எனவே வியாபாரிகள் வர்த்தகர்கள் கொண்டு செல்லும் தொகையை உயர்த்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.