கோவை,
பிரபல ஹேர் கிளினிக்கில் வாடிக்கையாளர் விபரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை திருடி நான்கு கோடி ரூபாய் வரை மோசடி செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னையை தலைமையிடமாக கொண்டு அடவ் குரோ ஹேர் கிளினிக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட இந்த நிறுவனத்தை கோவை ஆர் எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (42). என்பவர் பிரான்சைஸ் எடுத்து கடந்த 10 மாதங்களாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மண்டல மேலாளராக பாலகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த மே மாதத்தில் இருந்து பாலகிருஷ்ணன் பணிக்கு வராமல் இருந்துள்ளார். அதன் பிறகு நிறுவனத்தின் கணக்குகளை சரி பார்த்தபோது ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை பாலகிருஷ்ணன் திருடி சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நிறுவனத்தின் சார்பில் பாலகிருஷ்ணனை தொடர்பு கொண்ட போது ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிவிட்டதாகவும் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து தலைமை அலுவலகத்திற்கு வந்து முறைப்படி வேலை ராஜினாமா செய்து விட்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு செல்லுமாறு நிறுவனம் சார்பில் கூறப்பட்டது .அதன் பிறகு பாலகிருஷ்ணன் நிறுவனத்திற்கு செல்லாமல் இருந்து வந்தார். மேலும் நிறுவனத்தில் இருந்து பாலகிருஷ்ணனுக்கு கொடுக்கப்பட்டிருந்த லேப்டாப், செல்போன் ஆகியவற்றை தலைமை அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைத்தார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் புதிதாக ஆரா ஆஸ்தடிக் கிளினிக் என்ற பெயரில் கோவையில் புதிதாக துவக்கி இருப்பதாகவும் அங்கு வருமாறு பழைய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் .இதற்கு உதவியாக சென்னை அலுவலகத்தில் தலைமை அலுவலராக பணிபுரிந்து வந்த பிரேமலதா ஜேசுராஜ் மூலம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் விபரங்களை எடுத்து அவர்களை வைத்து புதிய நிறுவனத்தை நன்றாக நடத்தலாம் என பாலகிருஷ்ணன் திட்டம் திட்டி இருந்திருக்கிறார். இதன் காரணமாக தினேஷ் நடத்தி வந்த கோவை கிளையில் 50 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டது .தொடர்ந்து பாலகிருஷ்ணனை போன் மூலம் அழைத்து தினேஷ் பேசிய போது கூலிப்படை வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதை தொடர்ந்து தினேஷ் கோவை ஆர் எஸ் புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .பின்னர் கோவை ஆர் எஸ் புரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன் (35) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த சேலம் கிளையின் நடத்தி வந்த கிஷோர் குமார் மற்றும் சென்னை அண்ணாநகர் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்த ஜேசுராஜ் என்பவரின் மனைவி பிரேமலதா ஜேசுராஜ்( 48) ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே பிரேமலதா ஜேசுராஜ் மண்டல மேலாளர் கிஷோர் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து நிறுவனத்துடைய முக்கிய ஆவணங்கள், சப்ளையர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட ஏராளமான விபரங்களை திருடி நிறுவனத்திற்கு சுமார் 4 கோடி ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக நிறுவனத்தின் தலைமை அலுவலர் அணிந்தம் சமந்தா சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் போலிசார் விசாரணை நடத்தி வந்தனர். அதே சமயத்தில் கோவை ஆர் எஸ் புரம் போலீசாரும் பிரேமலதா ஜேசுராஜ் மற்றும் கிஷோரை தேடி வந்தனர். இந்நிலையில் பிரேமலதா ஜேசுராஜும், கிஷோரும் கேரளாவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கேரளாவில் பதுங்கி இருந்த அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த தகவல் அறிந்த கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் கோவையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு முறைப்படி கைது செய்து பின்னர் கஸ்டடி எடுத்து விசாரிக்க இருப்பதாக தெரிவித்தனர். மேலும் கோவை சிறையில் உள்ள பாலகிருஷ்ணனை சென்னை போலீசார் நுங்கம்பாக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கிற்காக மீண்டும் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *