மோசடி பத்திர பதிவு:விசாரணைக்கு உத்தரவு

கோவை,தமிழகத்தில் போலியான ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திர பதிவுகளை ரத்து செய்ய அந்தந்த மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போலியான ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பல பத்திர பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது .அந்த வகையில் கோவை கெம்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த தணிகாசலம் என்பவரின் மனைவி சுகன்யா கோவை மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்துள்ளார்.அதில் கடந்த 1998 ஆம் ஆண்டு மெட்டடோர் இன்ஜினியரிங் கம்பெனி என்ற நிறுவனத்தில் இருந்து கரியாம்பாளையம் ஊராட்சியில் 80 சென்ட் இடத்தை கே.வி.ராஜன் என்பவர் வாங்கியுள்ளார் .தொடர்ந்து அவர் மருதாச்சலம் என்பவருக்கு 80 சென்ட் இடத்திற்கு பவர் கொடுத்துள்ளார்.அதில் 26.5 சென்ட் இடத்தை கே.வி.ராஜன் கரியாம்பாளையம் ஊராட்சிக்கு தானமாக கொடுத்துள்ளார். மீதமுள்ள 53.5 சென்ட் இடத்தை மருதாச்சலம் கடந்த மார்ச் மாதம் தனது மகள் சுகன்யா விற்கு பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார்.இந்நிலையில் சுகன்யா பத்திர பதிவு செய்த சில நாட்களில் அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சுகன்யாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு அழைத்துள்ளார் .அங்கு சென்ற போது சுகன்யா பெயரில் உள்ள இடம் சித்தார்த் கௌதம் என்பவருக்கு சொந்தமானது என்றும் அந்த இடத்திற்குள் உள்ளே செல்லக்கூடாது எனவும் சுகன்யாவை சப் இன்ஸ்பெக்டர் எச்சரித்துள்ளார். இதைத் தொடர்ந்து சுகன்யா பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து அனைத்து ஆவணங்களையும் பெற்றார். அதில் சுகன்யாவிற்கு சொந்தமான இடத்தை விற்ற கே.வி. ராஜனுக்கு விற்ற மெட்டடோர் இன்ஜினியரிங் நிறுவனம் மூல பத்திரங்களை வழங்காமல் மோசடியாக அதனை இந்தியன் பேங்க் கிளையில் வைத்து கடன் வாங்கியது தெரியவந்தது. கரியாம்பாளையம் ஊராட்சிக்கு வழங்கப்பட்ட இடத்தையும் வைத்து இந்தியன் வங்கியில் கடன் பெற்றுள்ளனர். மேலும் கடனை திருப்பி செலுத்தாததால் அந்த இடத்தை இந்தியன் வங்கி ஏலம் விட்டுள்ளது. அப்போது அந்த இடத்தை காவிரி ஸ்பின்னிங் நிறுவன உரிமையாளர் சந்திரசேகர் ஏலத்தில் எடுத்து பின்னர் 2012 ஆம் ஆண்டு வாசுதேவா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சித்தார்த் கௌதமுக்கு விற்பனை செய்துள்ளார் என்ற விவரம் தெரிய வந்தது. தொடர்ந்து மேற்படி மூன்று மோசடி பதிவுகளை ரத்து செய்யும்படி சுகன்யா அந்த புகாரில் கூறியுள்ளார். புகாரின் பேரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி திங்கட்கிழமை விசாரணை நடத்த இருப்பதாகவும் அந்த சமயத்தில் உரிய ஆவணங்களுடன் ஆஜராகுமாறு சித்தார்த் கௌதம் உள்ளிட்டோருக்கு மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *