
கோவை,
தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் அறிவுமணி வசந்தகுமார் (36).இவர் கோவை கணபதியில் உள்ள ஜெம் நிர்மாலயத்தில் வசித்து வருகிறார். எம்சிஏ பட்டதாரியான இவர் பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் .கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பணி செய்யும் சூழல் ஏற்பட்டது .அந்த சமயத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் தனது வேலையை துறந்தார். தொடர்ந்து யோகா பாட்டி நானம்மாளின் மகன் டாக்டர் பாலகிருஷ்ணன் நடத்தி வரும் ஓசோன் யோகா மையத்தில் சேர்ந்து யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். ஆரம்பத்தில் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்ட அறிவு மணி தொடர்ந்து டிப்ளமோ இன் நேச்சுரோபதி யோகா சயின்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் யோகா தெரபிஸ்ட் ஆகிய படிப்புகளை முடித்தார். அதுமட்டுமல்லாமல் 25க்கும் மேற்பட்ட மாவட்ட ,மாநில மற்றும் தேசிய அளவிலான யோகா போட்டிகளில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். பீனிக்ஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் மற்றும் யுனிவர்சல் அச்சிவர்ஸ் அவார்ட்ஸ் உலக சாதனை நிகழ்வுகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார். மேலும் ஆன்லைன் மூலம் மற்றும் நேரடியாகவும் யோகா பயிற்சிகளை அவர் நடத்தி வருகிறார்.அதே போல மாநில அளவில் நடைபெறும் யோகா போட்டிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார் . பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவியருக்கு யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அடுத்த ஆண்டு துபாயில் நடைபெற உள்ள இன்டர்நேஷனல் யோகா போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தேர்வாகியுள்ளார்.