கோவை
ஆசியா சாம்பியன்ஷிப் டிராக் சைக்கிள் 2023 போட்டி மலேசியாவில் ஜூன் 14ந் தேதி தொடங்கி 19ந் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழகத்திலிருந்து 12ம் வகுப்பு மாணவி கோவை வீராங்கனை தன்யதா (17) கலந்து கொண்டார். இதில் இந்திய அணியின் 37 ரைடர்களில் ஜூனியர் தனிநபர் பிரிவில் தன்யதா பங்கேற்று 2.28.861 நிமிடத்தில் 2 கி.மீட்டர் பந்தயத்தில் வெற்றி பெற்று வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இந்திய டிராக் சைக்கிள் ஓட்டுதல் போட்டியில் பதக்கம் வென்றது இந்தியா இதுவே முதல் முறையாகும். இவர் கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றிய திமுக செயலாளர் சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் பிரியம்வதா தம்பதியரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இரவு விமான மூலம் கோவை வந்த வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது மேலும் பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.