கோவை,
தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தியை தொடர்ந்து ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு கடந்த சில நாட்களாக புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். இதை அடுத்து தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை அது வதந்திதான் என்று தமிழக முதல்வர், தமிழக போலீஸ் டிஜிபி இது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர் .இதனை தொடர்ந்து கோவை, ஈரோடு ,திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வட மாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தி உள்ள தொழிலதிபர்களை சந்திப்பதுடன் வட மாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு தமிழக போலீஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவைக்கு வந்தார். சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஆனந்தகுமார் மில்லில் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு காலை போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி அளித்தார். அப்போது அவர் கடந்த 1 ஆம் தேதி முதல் வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டு கொல்லப்படுவதாக வதந்தி பரவியது. இதை தொடர்ந்து ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் புறப்பட்டு சென்றார்கள் .இதை தொடர்ந்து தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்ட பிறகு பதட்டம் ஓரளவு தணிந்து உள்ளது .மேலும் இயல்பு நிலைக்கு வர உதவிய தொழிலதிபர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .பதட்டம் தனிந்திருந்தாலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் .இதுவரை வதந்தி பரப்பிய மூன்று பேரை கைது செய்துள்ளோம். மேலும் வதந்தி பரப்பிய நபர்களை தேடி போபால் டெல்லி பாட்னா உள்ளிட்ட இடங்களுக்கு தமிழக போலீஸ் தனி படை விரைந்து உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வதந்தி பரவியது ஓரளவு குறைந்துள்ளது. இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து தைரியம் கொடுக்க கூறியுள்ளோம். மேலும் ஒவ்வொரு நிறுவனத்திலும் பணிபுரியும் ஒரு நபரை போலீசார் தங்களது வாட்ஸ்அப் குழுவில் இணைத்து அவர்களுக்கு போதிய தகவல்களை வழங்கவும் கூறி இருக்கிறோம் .அதேபோல வட மாநில தொழிலாளர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் பாதுகாப்பை அதிகப்படுத்தவும் ரோந்து பணியை தீவிர படுத்தவும் செய்துள்ளோம். அதே சமயத்தில் ஜார்கண்ட் பீகாரில் உள்ள வட மாநில தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு அவர்கள் மொழியிலேயே இந்த பிரச்சனை வதந்தி காரணமாக தான் உள்ளது என்பதை தெளிவுபடுத்தி பேசி வருகிறோம் .இதற்கிடையே வதந்தி பரப்புவதற்கு வீடியோ தயாரித்த நபர்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். வதந்தி பரவிய முதல் நாளிலிருந்து வதந்திக்கு காரணமான நபர்கள் யார் என்பது குறித்து தீவிரப்புலன் விசாரணை நடத்தி வருகிறோம். இதில் ஒரு சிலருக்கு அரசியல் கட்சியின் தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது. வதந்தி பரப்பியவர்கள் மீது தமிழக போலீஸ் மட்டுமல்லாமல் பீகார் போலீசும் வழக்கு பதிவு செய்துள்ளது. வட மாநில தொழிலாளர்கள் ஏற்கனவே ஹோலி பண்டிகைக்கு ஊருக்கு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்து வைத்திருந்தவர்களும் சென்றுள்ளனர். அதே சமயத்தில் வதந்தி காரணமாகவும் புறப்பட்டு சென்றனர் .தற்போது வதந்தி பெருமளவு குறைந்ததால் வட மாநில தொழிலாளர்கள் புறப்பட்டு செல்வது குறைந்துள்ளது என்றார் .மேலும் தமிழகத்தில் 10 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் வரை இருப்பார்கள் என்பது தெரியவந்துள்ளது . ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது மேற்கு மண்டல ஐஜி சுதாகர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் எஸ் பி பத்ரி நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.