கோவை,
கோவை காந்தி பார்க் பகுதியில் இருந்து தடாகம் செல்லும் சாலையில் முத்தண்ணன் குளம் உள்ளது. தற்போது இந்த குளத்தின் கரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருவதால் அதன் சுற்றுப்புறத்தில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகள் அகற்றப்பட்டு உள்ளது . இந்நிலையில் இன்று காலை முத்தன்னன் குளத்தில் பெண் பிணம் ஒன்றும் மிதப்பதை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். இது குறித்த தகவலை அவர்கள் ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு ஆர். எஸ் .புரம் போலீசார் விரைந்து வந்தனர். தொடர்ந்து அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் .அவர்களும் அங்கு வந்து குளத்தில் மிதந்து கொண்டிருந்த பெண் பிணத்தை மீட்டனர் .அப்போது அந்த பெண்ணின் பையில் வைத்திருந்த டைரியை போலீசார் கைப்பற்றினர். பிறகு அதிலிருந்து செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர் .விசாரணையில் குளத்தில் இறந்து கிடந்த பெண் வேளாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மனைவி சுலோச்சனா( 75) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .பிணமாக மீட்கப்பட்ட சுலோச்சனா கடந்த சில ஆண்டுகளாக உடல் நல கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குளத்தில் தவறி விழுந்து இறந்து போனாரா? யாராவது கொலை செய்தார்களா என்பது குறித்து ஆர் எஸ் புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.