ஆன்லைன் மூலம் முபினுக்கு வெடிபொருள் வாங்கி கொடுத்த அப்சர்கான்

கோவை:
கார் வெடிப்பு வழக்கில் முபினின் நெருங்கிய உறவினரான அப்சர்கான் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். முபினின் பெரியம்மா மகன் தான் அப்சர்கான். இவரது வீட்டுக்கு முபின் அடிக்கடி சென்று வருவது வழக்கம். 2 பேரும் உறவினர்கள் என்பதால் யாருக்கும் சந்தேகம் எழவில்லை. முபின் வீட்டில் இருந்து வெடிபொருட்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு உள்ளது. பொட்டாசியம், நைட்ரேட், அலுமினியம் பவுடர், சல்பர், கரி உள்ளிட்டவற்றை அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி உள்ளனர். முபின் வெடிபொருள் வாங்க அப்சர்கான் அனைத்து வகையிலும் உதவி செய்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ள லேப்-டாப்பும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. முபினால் வெடிக்கப்பட்ட காரும், பல நாட்களாக அப்சல்கான் வசித்த குடியிருப்பு முன்பு நின்றுள்ளதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனால் கார் வெடிப்பு வழக்கில் அப்சர்கானுக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மீதும் உபா சட்டம் பாயும் என தெரிகிறது.