கோவை,
தீபாவளியையொட்டி அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளியின் போது பட்டாசுகளை வெடிப்பதால் நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெரு மளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுவதால் அனைத்து தரப்பு மக்களும் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படுவர்.சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும்,இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசு களை வெடிப்பதற்கு நேர நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியுள்ளது. அந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு களை வெடிக்கவேண்டும். பாதுகாப்பானதீபாவளியை கொண்டாட பொது மக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதி களில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிகமாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
%d bloggers like this: