ஆயுதபூஜைக்கான பொரி உற்பத்தி மும்முரம்

கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடையில் பொரி உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை நிலையத்தில் இருந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மூட்டை, மூட்டைகளாக பொரி அனுப்பப்பட்டு வந்தன. நாகரீக காலத்தில் துரித உணவுகளின் வரவால் பொரி சாப்பிடுவதை மக்கள் மறந்துவிட்டனர். விழாக்காலங்களில் மட்டுமே பொரியை பயன்படுத்தும் நிலை உள்ளது. வருகிற 4-ந் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு நிறுவனங்களும் பொரிகளை வாங்க தயாராகி வருகின்றனர். இதனால் பொரியின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காரமடையில் உள்ள பொரி உற்பத்தி நிலையத்தில் பொரி தயாரிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இங்கிருந்து, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களுக்கும், கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் இன்னும் விற்பனை அதிகரிக்கும் என்பதால் பொரி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகாவில் விளையும் ஐ.ஆர்.36 என்ற நெல்லில் பொரி உற்பத்தி செய்யப்படுகிறது. நாங்கள் அங்கிருந்து அந்த நெல்லை வாங்கி வந்து, ஊற வைத்து 7 நாட்கள் காய வைக்கிறோம்.பின்னர் 7 நாட்கள் கழித்து அதனை எடுத்து அப்படியே பொரியாக மாற்றுகிறோம். பின்னர் அதனை விற்பனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபடுகிறோம். தற்போது 50 பக்கா கொண்ட ஒருமூட்டை பொரி ரூ.450க்கு விற்பனையாகி வருகிறது. ஆயுதபூஜைக்கு 3 தினங்களே உள்ளதால், வரும் நாளில் பொரியின் விலை உயர வாய்ப்புள்ளது. பொரியை உணவு பொருளாக ஏற்று சாப்பிட மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது. அதற்கு பதிலாக பேல்பூரி, பாணிபூரி, காளான் என தனி நவீன உணவுக்கு மாறியதால், பொரியின் தேவை குறைந்துள்ளது. ஆயுத பூஜைக்கான உற்பத்தி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *