வாலிபரிடம் ரூ.36 லட்சம் மோசடி

கோவை நீலிக்கோணாம் பாளையத்தை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ்(வயது32). இவருக்கு கோவை பாப்ப நாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரேணுபிரியா (24) என்பவர் அறிமுகமானார். அப்போது ரேணுபிரியா எனக்கு தெரிந்த ஒருவர் திருப்பூரில் மிகப்பெரிய அளவில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். அவரிடம் பணம் கொடுத்தால், தொகைக்கு ஏற்ப அதிக வட்டி வாங்கி தருவதாக தெரிவித்தார். இதை நம்பிய சூரியபிரகாஷ் வெவ்வேறு கட்டங்களாக ரேணுபிரியாவின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலமாக ரூ.36 லட்சம் அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், ரேணுபிரியா கூறியபடி வட்டி தொகை வாங்கி கொடுக்கவில்லை. அசலையும் திருப்பி கொடுக்காமல் இருந்து வந்தார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சூர்யபிரகாஷ், ரேஸ்கோர்ஸ் போலீசில், ரேணுபிரியா மீது புகார் அளித்தார். போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ரேணுபிரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.