
கோவை கணபதி அடுத்த பகவத்சிங் நீதி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்பவரின் மகள் பவித்ரா (26 ) .தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஒப்பனக்கார வீதியில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் துணிகள் வாங்குவதற்காக சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு செல்வதற்காக ஓலா ஆப் மூலம் ஆட்டோ ஒன்றை புக் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஆப்பில் உள்ள தொகையை விட கூடுதலாக 100 ரூபாய் தந்தால் மட்டுமே சவாரி செய்ய இயலும் என கூறியிருக்கிறார். இதை அடுத்து பவித்ரா அந்த ஆட்டோவில் செல்லாமல் வேறு ஒரு ஆட்டோவைப் பிடித்து வீட்டிற்கு சென்று விட்டார் .இதை தொடர்ந்து ஆத்திரமடைந்த அந்த ஆட்டோ டிரைவர் பவித்ராவின் செல்போன் எண்ணுக்கு போன் செய்து ஆபாச வார்த்தைகள் பேசியதோடு மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து அந்த ஆட்டோ டிரைவர் போன் செய்து பவித்திராவை மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பவித்ரா பெரிய கடை வீதி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பவித்ராவை செல்போன் மூலம் அனைத்தும் மிரட்டியது வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகன் சந்தோஷ் (30 )என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.