கோவை மக்களை கவர வார இறுதிகளில் உணவு திருவிழா

கோவை மாநகராட்சியில் வார இறுதி நாள்களில், மக்களைக் கவரும் விதமாக இன்னிசை நிகழ்ச்சி, உணவுத் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களில் வார இறுதி நாள்களில் மக்களை கவரும் விதமாக பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதன்படி, உக்கடம் பெரியகுளத்தில் ‘ஆல் இன் ஆல் அங்காடி’ என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இங்கு, விருப்பமுள்ளவா்கள் தங்களது பொருள்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் வரவேற்கப்படுகிறாா்கள். முதலில் வருபவா்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
செப்டம்பா் 3, 4 ஆகிய தேதிகளில் காலை 11 முதல் இரவு 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும். வாலாங்குளத்தின் மேம்பாலத்துக்கு கீழ் ‘இன்னிசை ஈவ்னிங்’ என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இசையுடனும், தேநீருடனும், தங்கள் குடும்பத்துடன் செலவிட இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியானது, செப்டம்பா் 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், தங்களது இசைக் குழுவினருடன் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஆரோக்கியமான வாழ்வின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ‘சைக்ளத்தான்’ நிகழ்ச்சியானது செப்டம்பா் 18ஆம் தேதி காலை 6 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள், தன்னாா்வலா்கள் ஆா்வத்துடன் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், கோவையில் மாபெரும் உணவுத் திருவிழாவாக ‘அறுசுவை ஸ்டீரிட்’ நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. பாரம்பரியம் மற்றும் சமகால உணவுகளை மக்களிடம் கொண்டுச் சோ்க்கும் பொருட்டு இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. செப்டம்பா் 24, 25 ஆகிய இரு தினங்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில், உணவுகளை விற்பனை செய்ய விரும்பும் அனைத்து தரப்பினரும் ஸ்டால் அமைக்க முன்பதிவு செய்ய வரவேற்கப்படுகிறாா்கள். முதலில் வருபவா்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். மேலும், ஸ்டால்கள் முன்பதிவு செய்ய 99439 – 44223, 86374 – 90177 ஆகிய கைப்பேசி எண்கள் வாயிலாகவும், தளத்திலும் முன்பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.