
கோவை விமான நிலையத்தில் இருந்து அரசு விருந்தினா் மாளிகைக்கு வேனில் சென்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.
கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று இரவு கோவை வந்தாா்.
கோவை, திருப்பூா் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் திமுக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு நேற்று இரவு வந்தாா். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையம் வந்த தமிழக முதல்வரை எம்.பி. ஆ.ராசா, அமைச்சா்கள் செந்தில்பாலாஜி, சி.வி.கணேசன், மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி, முன்னாள் எம்.பி. நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. காா்த்திக், பையா என்ற கிருஷ்ணன் மற்றும் கட்சி நிா்வாகிகள் வரவேற்றனா்.
பின்னா் அவா் அங்கிருந்து காா் மூலம் ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினா் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றாா். அரசு விருந்தினா் மாளிகைக்குச் செல்லும் அவிநாசி சாலை வழி முழுவதும் கட்சித் தொண்டா்கள் திரண்டு பொய்க்கால் குதிரை நடனமாடி, மேளங்கள் இசைத்து வரவேற்றனா். சாலை வழி நெடுக முதல்வரை வாழ்த்தி, வரவேற்று சுவரொட்டிகளும், சுவா் ஓவியங்களும் வரையப்பட்டிருந்தன.
அரசு விருந்தினா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை இரவு தங்கி ஓய்வெடுக்கும் முதல்வா், தொடா்ந்து இன்று காலை 10 மணிக்கு ஈச்சனாரியில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, 1.07 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
இதனைத் தொடா்ந்து, பொள்ளாச்சி, ஆச்சிப்பட்டியில் புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் கட்சி விழாவில் பங்கேற்கிறாா். நிகழ்ச்சி முடிந்த பின்னா் அங்கிருந்து சாலை மாா்க்கமாக திருப்பூா் புறப்பட்டுச் சென்று இரவு அங்கு ஓய்வெடுக்கிறாா். பின்னா் நாளை திருப்பூரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலினின் கோவை வருகையையொட்டி கோவை விமான நிலையம், அரசு விருந்தினா் மாளிகை, ஈச்சனாரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் இடம், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி ஆகிய இடங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இப்பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கவோ, பலூன்கள் பறக்க விடவோ, ட்ரோன் கேமராக்கள் பறக்கவோ மாநகர போலீஸாா் தடை விதித்துள்ளனா்.