
தொழில் நகரங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில், தொழில் மற்றும் அவசர பணத் தேவைக்காக நிலம் மற்றும் சொத்துக்களை அடமானம் வைக்கும் நபர்களைக் குறிவைத்து மோசடி கும்பல்கள் தீவிரமாக நில அபகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
வங்கிகளில் கடன் பெற்று தொழில் செய்து வரும் தொழிலதிபர்கள் பலர் இருந்தாலும், ஒருசிலர் தங்களது அவசர தேவைக்காக தனியார் பைனான்சியர்களிடம் பூர்வீக சொத்துகளை அடமானம் வைத்து கடன் பெறுகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடி கும்பல், கோவையில் கொடிகட்டிப் பறக்கிறது.
குறிப்பாக, ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்திற்கு வெறும் ரூ.50 லட்சம் மட்டுமே கடனாக வழங்குகின்றனர். அதிலும் கிரையச் செலவு, 3 மாத முன்வட்டி என பெரும் தொகையைக் கழித்துக் கொண்டு சொற்ப பணத்தையே கடன் வாங்குபவர்களிடம் கொடுக்கின்றனர். 11 மாத ஒப்பந்த அடிப்படையில் நிலத்தை தங்கள் பெயருக்கு கிரையம் பெற்றுக் கொள்ளும் இவர்கள், கடன் வாங்கியவர்கள் பணத்தை முறையாகச் செலுத்தினாலும் கூட சொத்தை திருப்பி ஒப்படைக்காமல் ஏமாற்றி அபகரித்துக் கொள்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்கு பாளையம் பகுதியில், திருச்சியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் நடத்தி வந்த அலுவலகத்திற்குள் 30-க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் புகுந்த பைனான்ஸ் கும்பல், அங்கிருந்த நபர்களை அடித்து விரட்டிவிட்டு அலுவலகத்தைப் பூட்டி ரவுடித்தனம் செய்துள்ளது. இது தொடர்பாக செல்வபுரம் போலீஸ் நிலையத்திலும், கோவை மாநகர போலீசிலும் புகார் அளித்தும் 12 நாட்களுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதேபோன்று பொள்ளாச்சி மார்க்கெட் பகுதியில் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.6 கோடி மதிப்புள்ள தனது இடத்தை அடமானம் வைத்து ரூ.40 லட்சம் கடன் பெற்ற பெண் ஒருவரிடம், இடத்தை திருப்பித் தர வேண்டுமென்றால் ரூ.2 கோடி கொடுக்க வேண்டும் என்று பைனான்ஸ் கும்பல் மிரட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் தமிழக முதலமைச்சருக்கு கண்ணீருடன் புகார் மனு அனுப்பியுள்ளார்.
பைனான்சியர்களின் இந்த அடாவடித்தனம் குறித்து போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தாலும் போலீசார் கண்டுகொள்வதில்லை என்றும், பைனான்சியர்கள் மற்றும் அவர்களது அடியாட்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அடியாட்களின் மிரட்டலால் புகார் அளிக்கத் தயங்கும் பலர் தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவுக்குத் தள்ளப்படுகின்றனர்.
எனவே, தமிழக முதல்-அமைச்சரும், காவல்துறை உயர் அதிகாரிகளும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, சொத்துகளை அபகரிக்கும் கந்துவட்டி பைனான்ஸ் கும்பல் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுத்து பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.