வாடிக்கையாளர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து சியூபி வங்கி அதிகாரிகள் மோசடி

கோவை,

நாமக்கல்லை சேர்ந்த கேசவபாண்டியன் என்பவர் ‘நேச்சர்ஸ் டச் குளோத்திங் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். இவர் கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசில் 2024 ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். அதில், சிட்டி யூனியன் வங்கியில் தனது கணக்கு வாராக்கடனாக வகைப்படுத்தப்பட்ட போது நிலுவைத் தொகையாக இருந்த சுமார் ரூ.3.50 கோடியில், ரூ.2 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டது.

ஆனால், வங்கி அதிகாரிகள் சிலர் தன்னிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல், தனது கையெழுத்து மற்றும் தனது தந்தை முருகன், தாய் பொன்னுத்தாய், சகோதரர் அருண்பாண்டியன் ஆகியோரின் கையெழுத்துகளை போலியாக போட்டு பல ஆவணங்களை போலியாக தயார் செய்து மோசடி செய்துள்ளனர். வங்கியின் இந்த மோசடியை வாடிக்கையாளர் வெளியில் கூறியதால், சிட்டி யூனியன் வங்கி போலி ஆவணங்களை வைத்து கடன் தீர்ப்பாயத்தில் ரூ.5 கோடியே 8 லட்சத்து 9 ஆயிரத்து 959 கேட்டு பொய் வழக்கு தொடர்ந்து ஒருதலைப்பட்ச உத்தரவை வங்கி அதிகாரிகள்  பெற்றனர்.

2015-16 காலகட்டத்தில் சுமார் ரூ.45 கோடி மதிப்புள்ள 5 அடமான சொத்துக்களை, 2022-ல் வங்கி வெறும் ரூ.1.40 கோடி என்ற மிகக் குறைந்த விலைக்கு ஏலத்தில் விற்றுள்ளது. அதில் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரு சொத்தை மட்டும் ஏலம் எடுத்த அதே நிறுவனம் 19-6-2023 அன்று அந்தச் சொத்தை இந்தியன் வங்கியில் அடமானம் வைத்து ரூ.20 கோடி கடன் பெற்றுள்ளது.  

இந்த புகாரின் அடிப்படையில், கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் 14-11-2024 அன்று சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தனர்.

இதில் கிளை மேலாளர்

அரவிந்த் ,வங்கி மேலாளர் குஞ்சிதபாதம், உதவி மூத்த மேலாளர் கணேசன் , மூத்த பொது மேலாளர் மகாராஜன் ,மண்டல வளர்ச்சி மேலாளர் சுயம்புலிங்கராஜா ,வங்கி அதிகாரி

ராமன் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்:

இந்த வழக்கில் 5-வது குற்றவாளியான வங்கியின் மண்டல வளர்ச்சி மேலாளரான ஜி.சுயம்புலிங்கராஜா, தன் மீதான இந்த மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தடய அறிவியல் ஆய்விற்காக அசல் ஆவணங்களை சமர்ப்பிப்பதாக ஒப்புக்கொண்ட வங்கி தரப்பு, அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியது. இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, வங்கி அதிகாரிக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி , வழக்கை ரத்து செய்ய அதிரடியாக மறுத்துவிட்டார். மேலும், கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தொடரவும் அவர் உத்தரவிட்டார்.  

வழக்கை விசாரித்த நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:

வங்கி அதிகாரிகள் மீது போலி ஆவணங்கள் தயாரித்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தணிக்கையாளர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, வாடிக்கையாளருக்கே தெரியாமல் கூடுதல் கடன் வழங்கப்பட்டதாக கணக்கு காட்டி, பழைய கடனை அடைக்க அந்த பணம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அந்த கடன் தொகையை வாடிக்கையாளர் தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தினாரா அல்லது வங்கி அதிகாரிகள் ஆவணங்களை போலியாக தயாரித்தார்களா என்ற உண்மைகள் போலீஸ் விசாரணையில் தான் முழுமையாக தெரியவரும். எனவே, மோசடி குறித்த போலீஸ் விசாரணையை இப்போது ரத்து செய்ய முடியாது.

இவ்வாறு கூறி, சிட்டி யூனியன் வங்கி அதிகாரியின் மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார். கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய சமயத்தில் சிட்டி யூனியன் வங்கி தரப்பில் தொடர்ந்து வழக்கிற்கு தடை கேட்டு பல்வேறு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு போலீசாரால் விசாரணை செய்ய முடியாமலே இருந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்துள்ள இந்த தீர்ப்பை தொடர்ந்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கை விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *