கோவை:

உடுமலை காந்தி நகர் கல்யாணி நகரைச் சேர்ந்தவர் வி.விஜயசேகரன் (73). இவருக்கு சொந்தமாக கோவை மசக்காளிபாளையம் காந்தி நகர் பகுதியில் 20 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை 1991-ம் ஆண்டு வாங்கினார். 

கடந்த ஜூலை 9-ம் தேதி சுலோச்சனா மற்றும் அவரது கூட்டாளிகள் விஜயசேகரன் நிலத்தின் கம்பி வேலியை உடைத்து அத்துமீறி கூடாரம் அமைத்தனர். இதுதொடர்பாக கோவை சிங்காநல்லூர் போலீசில் விஜயசேகரன் அளித்த புகாரின் பேரில், சுலோச்சனா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், போலி ஆவணங்கள் தயாரித்து தயாளன், சிவலிங்கம், நந்தகுமார், கௌதம் ஆகியோர் இந்த நிலத்திற்கு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்திருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை உடுமலையில் உள்ள விஜயசேகரன் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து சிங்காநல்லூர் காவல் நிலைய முதல் தகவல் அறிக்கையின் நகலை வைத்துக்கொண்டு , திருப்பூரில் உள்ள ஒப்பந்ததாரர்கள் தன்னை அனுப்பியதாகக் கூறி பேசியுள்ளார்.

தொடர்ந்து ஒரு எண்ணிற்கு போன் செய்து விஜயசேகரனிடம் கொடுத்தார். அதில் பேசிய நபர், “தனது பெயர் குமார் என்றும் வழக்கை சிவில் கோர்ட்டில் நடத்து என மிரட்டினார். அதேநேரம், நேரில் வந்த நபர், “கோவை போலீசில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும்; இல்லையென்றால் உன்னை உயிரோடு விடமாட்டோம்” என பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

அவர்கள் தங்களது பெயர் குமார், ராஜ்குமார் எனக் கூறி அளித்த செல்போன் எண்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.இதை தொடர்ந்து விஜயசேகரன் மேற்கு மண்டல ஐஜி மற்றும் உடுமலை போலீசில் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்தார். புகாரில் மர்ம நபர்கள் மூலம் மிரட்டல் விடுத்த தயாளன், சிவலிங்கம், நந்தகுமார் மற்றும் கௌதம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் காந்திநகர் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *