கோவை,
கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் உமா மகேஸ்வரிக்கு
குடும்ப நண்பரான யசோதா என்பவர் மூலமாக, கோவை விஸ்வேஸ்வரா நகர், டவுன் ஜகான் சிட்டி அபார்ட்மெண்ட்டில் வசித்து வரும் அகிலா (அகிலாண்டேஸ்வரி) மற்றும் அவரது கணவர் பாபு ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற வங்கி மூலம் மகளிர் சுய உதவிக்குழு அமைத்து, குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறினர். இதனை நம்பி உமா மகேஸ்வரி “கண்மணி மகளிர் சுய உதவிக்குழு” என்ற குழுவில் துணைத் தலைவியாகச் சேர்ந்துள்ளார்.
கடன் பெறுவதற்கான நடைமுறை என்று கூறி, முதலில் உமா மகேஸ்வரி வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1,000-ஐ அவர்களது கணக்கிற்கு அனுப்பச் சொல்லி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பெரியநாயக்கன்பாளையம் கனரா வங்கி மூலம் ரூ.2 லட்சம் கடன் உறுதி செய்யப்பட்டு, அதில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி உமா மகேஸ்வரி வங்கிக் கணக்கில் முதலில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மற்றும் இரண்டு மாதங்கள் கழித்து ரூ.10,000 வரவு வைக்கப்பட்டது.
கடன் தொகை கணக்கில் வந்த உடனே, அகிலா என்பவர் “கமிஷன்” என்ற பெயரில் ரூ.45 ஆயிரத்தை உடனடியாக தனது வங்கிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என்றும், இல்லையெனில் கடனை ரத்து செய்துவிடுவதாகவும் மிரட்டினார். இதனால் பயந்துபோன உமா மகேஸ்வரி அந்தத் தொகையை அவரது கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார் .
மேலும், மாதந்தோறும் வங்கியில் செலுத்த வேண்டிய ரூ.5,000 தவணைத் தொகையை வங்கியில் செலுத்த வேண்டாம் என்றும், அதைத் தனது வங்கிக் கணக்கிற்கே அனுப்பக் கோரியும் உமா மகேஸ்வரி இடம் முதல் மூன்று மாதங்களுக்கு மொத்தம் ரூ.15 ஆயிரம் பெற்றுக் கொண்டார். இதேபோல், குழுவின் மற்ற உறுப்பினர்களான யசோதா மற்றும் பவித்ரா ஆகியோரின் மாதத் தவணைத் தொகையான தலா ரூ.5,000-ஐயும் உமா மகேஸ்வரி இடம் வாங்கி, அகிலாவின் வங்கி கணக்கிற்கு அனுப்ப வைத்துள்ளார். ஆனால், இந்தத் தொகைகளுக்கு எவ்வித ரசீதோ அல்லது முறையான கணக்கு விவரமோ தராமல் ஏதேதோ காரணம் சொல்லி இழுத்தடித்துள்ளார்.
இவ்வாறு உமா மகேஸ்வரி இடம் இருந்து மட்டும் கமிஷன், தவணைத் தொகை என மொத்தம் ரூ.61 ஆயிரம் பணத்தை அகிலா சட்டவிரோதமாகப் பெற்று ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து அகிலாவிடம் விளக்கம் கேட்டபோது, பெரியநாயக்கன்பாளையம் எல்எம்டபிள்யூ பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள வாகை டிரஸ்ட் அலுவலகத்திற்கு உமா மகேஸ்வரியை அழைத்துச் சென்றனர். அங்கு இருந்த வாகை டிரஸ்ட் நிர்வாகிகள் பிரியா, ஜெயந்தி உள்ளிட்டோர் உமா மகேஸ்வரியை மிரட்டி, “அகிலாவின் கமிஷன் போக மீதமுள்ள தொகையை வங்கி ஊழியர்களும் நாங்களும் பங்கிட்டுக் கொண்டோம்” என்று அதிரவைக்கும் தகவலைக் கூறினர்.
மேலும், இதுகுறித்து போலீசிலோ அல்லது அரசு அதிகாரிகளிடமோ புகார் செய்தால், ரவுடியை வைத்துக் கொன்று விடுவதாகவும், குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
எனவே, இந்த நூதன மோசடி மற்றும் கொலை மிரட்டல் குறித்து முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரித்த போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வாகை டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்தை பிரியா ,ஜெயந்தி உள்ளிட்ட சிலர் நடத்தி வருகின்றனர்.
இவர்கள் அலுவலகத்தில் உள்ள பெண்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கோவை புறநகர் பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களை அணுகி அவர்களது குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் ஏற்பாடு செய்து தருவதாகவும் மாதத் தவணையில் அதனை திருப்பி செலுத்தினால் போதும் என்றும் கூறியிருக்கின்றனர். இதை நம்பிய மகளிர் சுய உதவி குழு பெண்கள் தங்களது ஆவணங்களை ஒப்படைத்துள்ளனர் .அதனை வைத்து பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிளையில் வங்கி கடனுக்கு ஏற்பாடு செய்துள்ளனர் .ஒரு நபருக்கு 2 லட்ச ரூபாய் விதம் ஒரு குழுவில் உள்ள 10 பெண்களுக்கு சுமார் 20 லட்ச ரூபாய் வரை வங்கி கடனை ஏற்பாடு செய்துள்ளனர் .இந்த தொகை அனைத்தும் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் .அந்த சமயத்தில் டிரஸ்ட்டை சேர்ந்த செல்வி, மேரி,அகிலா, மாதவி உள்ளிட்ட பெண்கள் சுய உதவி குழுக்களில் பணம் வரவு வைக்கப்பட்ட பெண்களிடம் இருந்து சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு கட்டணங்களை கூறி வாங்கி உள்ளனர் . பிறகு மாதத் தவணையை சம்பந்தப்பட்ட கடன் வாங்கிய பெண்களை கட்டுவதற்கு அறிவுறுத்தி உள்ளனர். ஒரு சில பெண்கள் கிடைத்த 70 ஆயிரம் ரூபாய்க்கு மாதம் 5 ஆயிரம் தவணை செலுத்தி வருகின்றனர். சில பெண்கள் தங்கள் வங்கி கணக்கை வைத்து டிரஸ்டைச் சேர்ந்த பெண்கள் மோசடி செய்துள்ளார்கள் என்பதை அறிந்து அவர்களிடம் சென்று சண்டை போட்டுள்ளனர் .அப்போது
ரவுடி ஒருவரின் துணையோடு அப்பாவி பெண்களை அவர்கள் மிரட்டி உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இவர்கள் தலா 2 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கி கொடுத்துள்ளனர். இதில் கடன் வாங்கிய பெண்களுக்கு கொடுத்தது போக ஒவ்வொரு பெண்களிடமிருந்தும் குறைந்தபட்சம் 1 லட்ச ரூபாய் வரை இவர்கள் எடுத்து தங்களுக்குள் பங்கு போட்டுள்ளனர்.
இப்படி மோசடியாக சம்பாதித்த பணத்தில் நகைகள்,ஆடம்பர வீடு, தோட்டம் என சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். இது போக அலுவலகப் பெண்களை அழைத்துக் கொண்டு
மாதம் இரண்டு முறை உல்லாச சுற்றுப் பயணங்கள் சென்றுவர பல லட்ச ரூபாயை செலவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுவதை வைத்து பார்த்தால் சுமார் 50 முதல் 60 கோடி ரூபாய் வரை இதில் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த மோசடி கும்பல் ஏற்கனவே பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இதே போல நூதனமான முறையில் பெண்களுக்கு கடன் வாங்கி கொடுத்து அந்த பணத்தில் இருந்து தங்களுக்கு கமிஷன் என்ற பெயரில் பல லட்சம் ரூபாயை ஏற்கனவே மோசடி செய்திருப்பதும் தெரிய வருகிறது.
மோசடி கும்பல் குறித்தும், அவர்களுக்கு வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்தும் மாவட்ட குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும். மேலும் மோசடி பெண்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக உள்ள ரவுடி ஒருவன் உள்ளிட்டோர் மோசடி பணத்தின் மூலம் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *